×

ஏழைகளின் ஊட்டி; கேரளாவின் பியூட்டி: உள்ளம் கொள்ளை கொள்ளும் நெல்லியாம்பதி

சங்க காலத்தில் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என தமிழர்கள் நிலங்களை 5 வகைகளாக பிரித்தனர். இதில் கோடை கால சுற்றுலாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடம் என்றால் அது குறிஞ்சி நிலம்தான். மலையும், மலையை சார்ந்த இடமான குறிஞ்சியில்தான் முழுக்க முழுக்க கோடை காலத்தின்போது குளு, குளு சீசனை அனுபவிக்க முடியும். மலை என்பது வெறும் பாறையாக இல்லாமல் அது வனங்கள் சூழ்ந்த பகுதியாகவும் வற்றாத நீர் வீழ்ச்சிகளும், ஓடைகளும் நிறைந்து, பசுமை போர்வையால் போர்த்தியிருந்தால், அது கண்களுக்கு விருந்தாகத்தான் அமையும்.

அது போன்ற ஒரு சுற்றுலா தளத்தை குறைந்த செலவில் கண்டு களிக்க முடியும் என்றால், யாருக்குத்தான் குதூகலம் இருக்காது. பட்ஜெட்டுக்குள் சுற்றுலா என்றால் யார்தான் இந்த கோடை விடுமுறையில் அதை காணாமல் இருப்பார்கள். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் அந்த மலைக்கிராமத்தில் ராமர், சீதை, லட்சுமணன் தங்கியிருந்தார்கள் என்றொரு ஐதீகம் உண்டு. இதை கேட்பவர்களுக்கு உடனடியாக அங்கு செல்ல ஆர்வம் உண்டாவது இயற்கை.

எங்கே உள்ளது அந்த குளு குளு பிரதேசம்? தமிழக-கேரள எல்லையில் பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாம்பதிதான் அந்த மலைக்கிராமம். இங்கு டீ, காபி, ரப்பர், ஆரஞ்சு மட்டுமின்றி மலைக்காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சுவை மிகுந்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ஜாம் மற்றும் தேயிலைத்தூள் போன்றவை விற்கப்படுகின்றன. நெல்லியாம்பதியில் ஏறத்தாழ ஊட்டி, கொடைக்கானல் போன்ற சீதோஷ்ண நிலையே இருக்கும். எனவே இங்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மீண்டும் மீண்டும் செல்வதற்கு விருப்பம் கொள்வர்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கிராமத்துக்கு பாலக்காட்டில் இருந்து நெம்மரா, போத்துண்டி ஆகிய கிராமங்கள் வழியே செல்லலாம். போத்துண்டியில் அணை உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதம் போத்துண்டி அணையின் வியூ பாயிண்ட், ஐயப்பன் கோவில் வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. இப்பகுதிகளை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். போத்துண்டி அணை அருகே வனத்துறையின் சோதனைச்சாவடி, பயணிகள் தங்கும் விடுதி, வனப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் வாசனை திரவியங்கள், மூலிகைகள், தேன் போன்றவற்றின் விற்பனைக்கூடம் அமைந்துள்ளது.

போத்துண்டி அணையில் இருந்து 21 கிமீ தொலைவில்தான் நெல்லியாம்பதி அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் மலைவழிப்பாதையின் இருபுறங்களிலும் அடர்ந்த காடுகளையும், பச்சை பசேல் செடி, கொடிகளையும், அருவிகளையும், தோட்டங்களையும் கண்டு ரசிக்க முடியும். கிடுகிடு பள்ளமும், பனி சூழ்ந்த தோட்டங்களும், மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகங்களும் காண மனம் மயங்கும்.

இந்த மலைக்கிராமத்தின் பாதைகள் ஒரு வழிப்பாதை போன்று குறுகியதாக இருந்தாலும், வனப்பகுதியில் பயணிக்கின்ற ஒருவித அச்சம் இருந்தாலும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை அந்த அச்சத்தை போக்கும். யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தை, சிங்கவால் குரங்குகள், காட்டு மாடுகள், மான்கள் போன்றவை அவ்வப்போது சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடுவதுண்டு. இதனால் மாலை 4 மணிக்கு மேல் நெல்லியாம்பதி செல்வதற்கு அனுமதி இல்லை. காலை 6 மணிக்குதான் வாகனங்கள் இந்த மலைச்சாலையில் பயணிக்க அனுமதி உண்டு. நெல்லியாம்பதியில் தமிழர்களும், மலையாளிகளும், ஆதிவாசிகளும், பழங்குடியினர்களும் என சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் தேயிலை தோட்டங்களிலும், காப்பி தோட்டங்களிலும், மலை காய்கறி பயிரிட்டும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். நெல்லியம்பதியை சுற்றி உள்ள கைகாட்டி, காரப்பாறை, கேசவன் பாறை, சீதாராம் குன்று ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் பகுதிகளாக உள்ளன.

காரப்பாறை என்னும் இடத்தில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தொங்குபாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத இடமாகும். கைகாட்டி பகுதியில் ஆரஞ்சு தோட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சுவை மிகுந்த ஆரஞ்சு பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. விற்பனை போக எஞ்சியவற்றை எல்லா காலங்களிலும் பயன்படும்படியாக ஜூஸ் மற்றும் ஜாம் வகைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். கேசவன்பாறை என்னும் இடமானது மிகச்சிறந்த சூட்டிங் ஸ்பாட்டாக திகழ்கிறது.
நெல்லியாம்பதி மலைக்கிராமத்தில் இருந்து 3 கிமீ மற்றும் 6 கிமீ தொலைவுகளில் மலைச்சரிவுகளும், காட்டாறுகளும், உயர்ந்த நீர்வீழ்ச்சிகளும், கிடு, கிடு பள்ளத்தாக்குகளும் உள்ளன. நெல்லியாம்பதியிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி மிக அழகிய காட்சி முனையாக திகழ்கிறது. நெல்லியாம்பதிக்கு கோடை காலங்களின்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கின்றனர். நண்பர்களுடன் வந்தவர்கள் அடுத்த முறை குடும்பத்தினரை அழைத்து வந்து மகிழ்கின்றனர்.

உள்ளூர் வாகன ஓட்டிகள் (ஜீப் சவாரி) பாதுகாப்பாக இந்த பகுதிகளுக்கு அழைத்து சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க உதவுகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றால் வனங்கள் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். சுற்றுலா என்பது மனமகிழ்ச்சி அளிக்கக்கூடியது. அதே சமயம் நீர் நிலைகள், வனப்பகுதிகள் போன்றவற்றை கண்டு ரசிக்க செல்லும்போது ஆபத்தான சாகசங்களை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே வனத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை கலந்த ஆலோசனையாக இருக்கிறது.

Tags : Kerala , feeder of the poor; Beauty of Kerala: Nelliyampathy that steals the soul
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!