×

பேச்சுவார்த்தை சாத்தியமில்லை: அமித்ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடெல்லி: ‘அதானி விவகாரத்தில் எம்பிக்கள் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையானது, பேச்சுவார்த்தைக்கு சாத்தியமற்றது’ என அமித்ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற அமளிக்கு முடிவு கட்ட எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதானி விவகாரத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற கூட்டு விசாரணையை கேட்பதால், ஒன்றிய பாஜ அரசு திணறுகிறது.

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை. அதே சமயம், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற பாஜவின் கோரிக்கைக்கும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் நடுவே பொதுவான எந்த தீர்வையும் நான் பார்க்கவில்லை. அதானி விவகாரத்தை திசை திருப்பத்தான் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜ பிரச்னை கிளப்புகிறது. இதற்கு முன் பிரதமர் மோடி, சீனா, தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டு அரசியல் விவகாரத்தை பேசுவதையும், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அதற்காக அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் இன்றைய ஜனநாயகத்தை பற்றி பேசியதற்காக ராகுல் எப்படி மன்னிப்பு கேட்க முடியும். இந்திய விவகாரத்தில் வெளிநாட்டின் தலையீட்டை ராகுல் கேட்பாக பாஜ கூறுவது அப்பட்டமான பொய். அதானியை காப்பாற்ற பிறர் கருத்துக்களை சிதைப்பது, அவதூறு செய்வது, திசை திருப்புவது என பிரதமர் மோடியின் 3 முக்கிய உத்தியை பாஜவினர் பின்பற்றுகின்றனர். ஆனால், நாடாளுமன்றம் முடங்க எதிர்க்கட்சிகள் தான் காரணம் என எங்களை களங்கப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போதைய நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அல்ல, ஆளும் தரப்பு தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Jairam Ramesh ,Amit Shah , Talks not possible: Jairam Ramesh hits back at Amit Shah
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை...