×

பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள், கட்டிட கலைஞர்கள் பயிற்சி முகாம்: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் பயிற்சி முகாமை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். சென்னை அடையாறு தனியார் ஓட்டலில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் பயிற்சி முகாமை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:  கட்டுமானப் பொறியியல் வல்லுநர்கள் உலகளவில் சந்தையில் கிடைக்கும் நவீன கட்டுமானப் பொருட்களின் வருகை, அவற்றின் தன்மை, பயன்பாடு, விலை ஆகியவற்றை அவ்வப்போது அறிந்துகொள்ள வேண்டும்.

அத்தகைய நவீன தொழில்நுட்ப நடைமுறைகளைப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் அறிந்து, அவற்றை இத்துறை உருவாக்கிடும் கட்டிடங்களில் பயன்படுத்தினால், தரம் மற்றும் உறுதித்தன்மையோடு கட்டிடங்கள் உருவாகும். கட்டிடங்களுக்கான செலவினங்களும் குறையும். அதுமட்டுமல்லாமல் கட்டிடப் பராமரிப்பு செலவினங்களும் வெகுவாக குறையும். எனவே, பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் கட்டுமானங்களில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வமுடன் செயல்பட்டாக வேண்டும். உங்கள் ஒவ்வொருக்கும் இத்தகைய ஆர்வம் மிகவும் அவசியம்.

கட்டிடங்களை உருவாக்கும்போது, பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்கள் பின்வரும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மண் பரிசோதனை, கட்டிடத்திற்கு தேவையான உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை முதலில் ஆராய வேண்டும். கட்டிட கலைஞர்கள், கட்டிட வரைபடங்கள் தயாரிக்கும் போது, கட்டிடங்களில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்கள் வெளியேறும் பகுதியில் கான்கிரீட் போன்ற அமைப்புகள் குறுக்கிடாமல் வடிவமைத்திட வேண்டும். அதேபோல், மின் அமைப்புகளும் கான்கிரீட் போன்ற அமைப்புகள் குறுக்கீடு இல்லாமல் வடிவமைக்கப்பட வேண்டும். கட்டிடங்களில் நீர்க்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான வாட்டர் ப்ரூப் நடைமுறைகளை அவசியம் பயன்படுத்திட வேண்டும்.

எம் சாண்ட் சுவர் பூச்சுப் பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவை பயன்படுத்தப்பட வேண்டும். மின் பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து மின் கசிவு ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும். தற்போது பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பீம், சிலாப், காலம் என்ற முறையில் பணித்தளத்திலேயே அதாவது ஆன்சைடில் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி போன்ற மலைப்பகுதிகளிலும் தற்போது இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் தரைதளம் முதல் முதல்தளம் என்ற அளவிலேயே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இப்பணிகளின் தொழில்நுட்ப விவரங்களை திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டம் தயாரித்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Engineers and Architects Training Camp ,Minister ,A. Etb. Velu , Training Camp for Engineers, Architects in Public Works: Minister AV Velu inaugurated
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...