×

திண்டுக்கல்லில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் செல்லும் சின்ன வெங்காயம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மார்க்கெட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதால் அவற்றின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு என்று மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இங்கு சாம்பாருக்கு பயன்படுத்தக்கூடிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வெங்காய மார்க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 தினங்கள் மட்டுமே செயல்படும். திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இங்கு வரக்கூடிய சின்ன வெங்காயங்களை ஏல முறையில் வியாபாரிகள் பெற்று திருச்சி, தஞ்சை,சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையே இங்கு ஏலத்தில் எடுக்கும் சின்ன வெங்காயத்தை வியாபாரிகள் சிலர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இதன்படி கடந்த 1ம் தேதி வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. கடந்த மூன்று மாத காலத்தில் சென்ற வாரம் வரை சின்ன வெங்காயத்தின் விற்பனை விலை சமநிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்து வியாபாரிகள் வெங்காயம் கொள்முதல் செய்ய வருகை தந்துள்ளனர். அத்துடன் வெங்காயத்தின் தினசரி வரத்து 200 டன் என்பதில் இருந்து 300 டன் வரை அதிகரித்துள்ளது.
இதனால் அவற்றை அதிக அளவில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதற்கிடையே சின்ன வெங்காயத்தின் ஏலத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் கொள்முதல் விலையும் கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கொள்முதல் விலை உயர்வு என்பது தற்போது குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags : Dindigul ,Malaysia, Singapore , Onion from Dindigul to Malaysia, Singapore: Farmers happy with price hike
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...