வடமதுரை: வடமதுரை சவுந்தராஜ பெருமாள் கோயில் நிலம் பராமரிப்பின்றி உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை வேலி போட்டு பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடமதுரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சவுந்தராஜ பெருமாள் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சமீபத்தில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தேறியது. பல்வேறு மன்னர்கள் காலங்களில் கோயிலுக்கு என தானமாக பல ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டது. காலப்போக்கில் அவை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டது. தற்போது ஒரு சில ஏக்கர் நிலங்களே மிஞ்சியுள்ளது.
இதன்படி திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் தும்மலக்குண்டு பிரிவு அருகே பால்கேணிமேடு என்ற இடத்தில் வடமதுரை பெருமாள் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 11 ஏக்கர் 17 சென்ட் நிலம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இந்த நிலத்தின் வழியாக கழிவுநீர் ஆறுபோல் சென்று தேங்கி நிற்கிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அதேநேரத்தில், இங்குள்ள பால்கேணிமேட்டில் வடமதுரை பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடக்கும்.
அப்போது வடமதுரை நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இத்தனை பெருமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் நிர்வாகம் சுற்றிலும் வேலி போட்டு பாதுகாத்து அதில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கலாம் என்று வடமதுரை பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுபற்றி கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த நிலம் பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அவர்கள் விவசாயம் செய்து வந்தனர்.
தற்போது தண்ணீர் வசதி போதுமானதாக இல்லை என்பதால் விவசாயம் செய்ய யாரும் முன் வரவில்லை. கோயில் நிலத்தில் மின்சார வாரியத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று போர்வெல் அமைத்து அதன் பிறகு மரக்கன்றுகளை நடவு செய்யவும், வேலி அமைத்து பராமரிக்கவும் தேவயைான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
