புதுடெல்லி: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நேற்று வட்டமேசை மாநாடு நடத்திய தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவுக்கு 13 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரிடம் அமலாக்கத்துறை முதல்கட்டமாக 9 மணி நேரம் விசாரித்துள்ளது. இன்று 2ம் கட்ட விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்தநிலையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கவிதா தலைமையில் நேற்று டெல்லியில் வட்டமேசை மாநாடு நடந்தது. இதில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பினாய் விஷ்வம், சமாஜ்வாதி கட்சி சார்பில் எஸ்டி ஹசன், ஜேஎம்எம் சார்பில் மகுவா மஞ்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஷா, சிவசேனா சார்பில் பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி சார்பில் ராகவ் சதா, ஆர்எஸ்பி சார்பில் பிரேமசந்திரன் உள்பட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
