திருமலை: போகி பண்டிகை விவசாயத்தின் கடவுளிடம் ஆசி பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. அறுவடை திருநாளின் ஆரம்ப நாளாகவும் இந்த நாள் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இதனை பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாக முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.
போகிப் பண்டிகை என்பது தேவர்கள் மற்றும் மழையின் தெய்வமாகிய இந்திரனுக்கு நன்றி செலுத்தி, மரியாதை செலுத்தும் நாளாகும். மண் செழித்து மகிழ்ச்சியும், செல்வமும் பெருக வேண்டும் என்பதற்காக விவசாயிகள் இந்த நாளில் இந்திரனை வழிபடுவத வழக்கம். போகிப் பண்டிகை அன்று இந்திர வழிபட்டு, அவருக்கு பூஜை செய்வதால், அவர் மனம் மகிழ்ந்து அந்த ஆண்டு முழுவதும் நல்ல மழையையம், விளைச்சலையும் தருவார் என்பது நம்பிக்கை.
போகி பண்டிகையை கொண்டாடும் சரியான முறை என்பது குப்பைகள், பழைய துணிகள், டயர்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிப்பது கிடையாது. நம்முடைய மனதில் உள்ள பொறாமை, கோபம் போன்ற தீய எண்ணங்களை எரிக்க வேண்டும். போகி பண்டிகையில் தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து அகற்றி விட்டு, அனைவருடனும் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே போகி பண்டிகையின் நோக்கமாகும்.
இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து வைத்த பிறகு வீட்டு தெய்வத்தை வீட்டிற்கு அழைத்து, பிறக்க போகும் தை மாதம் சிறப்பானதாக அமைய வேண்டும், இந்த வருடம் நன்மையானதாக அமைய வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இந்தநிலையில் இன்று அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாந்த சேவைக்கு பிறகு மூலவர் சன்னதி கதவுகள் மூடிய பின்னர் கோயில் முன்பு கட்டைகள் வைத்து போகி தீ மூட்டி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து போகி தீயிட்டு எரித்தனர்.
இதேபோன்று வைபவ உற்சவம் மண்டபம் எதிரில் போகி தீயிட்டு கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என வேண்டி கொண்டனர். இதனையடுத்து நித்ய பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் முழுவதும் போகி தீ யிட்டதால் அதிகாலையில் இருந்தே புகை மூட்டம் சூழந்து சாலைகள் காணப்பட்டது. இதனால் காலையில் அலுவலக பணி மற்றும் இதர பணிகளுக்காக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.
