×

கிணற்றில் வீசி 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை: நாமக்கல் அருகே சோகம்

மோகனூர்: இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான அப்பெண்ணின் தந்தையும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி குணவதி (27). இவர்களது குழந்தைகள் பிரணவ் பிரியன் (5), சுஜித் பிரியன்(2). கோபி, மோகனூர் உழவர் சந்தை அருகே ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களது வீட்டுக்கு அருகிலேயே குணவதியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

கோபியும்- குணவதியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்த குணவதி, குழந்தைகளுடன் திடீரென மாயமானார். இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் அக்கம்- பக்கத்தினரின் உதவியுடன் தேடினர். அப்போது, வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கோயில் கிணற்றுக்குள் பார்த்துள்ளனர். கிணற்றினுள் உள்ள மரத்தில் குணவதி தூக்கில் சடலமாக தொங்கினார். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கிணற்றுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது பிரணவ் பிரியன், சுஜித் பிரியன் ஆகிய இரண்டு குழந்தைகளும் சடலமாக மிதந்தனர். மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூவரின் உடல்களையும் மீட்டு விசாரித்தனர்.

அதில், கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருந்தால், அதனுள் குழந்தைகளை வீசி கொலை செய்துவிட்டு, அங்கிருந்த மரத்தில் குணவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 3பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே குழந்தைகளை கொலை செய்து விட்டு மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து குணவதியின் தந்தை கேசவன், திடீரென அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்பத்தகராறில் குணவதி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து குணவதியின் கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்டிஓ பிரபாகரன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோரும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Namakkal , Mother commits suicide by throwing her 2 children into a well: Tragedy near Namakkal
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி