நாமக்கல், ஜூலை 22: நாமக்கல்லில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வில் 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காலை 10 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 221 தேர்வர்கள், நாமக்கல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 280 தேர்வர்கள் என மொத்தம் 501 தேர்வர்கள் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். இவர்களில் 10 தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இடைநிலை ஆசிரியர் தேர்வை 481 தேர்வர்கள் எழுதினார்கள். 20 பேர் தேர்விற்கு வரவில்லை. இதில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், சிஇஓ மகேஸ்வரி, டிஇஓ.,க்கள் விஜயன், பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு appeared first on Dinakaran.