×

நாடாளுமன்ற துளிகள்...

* உறுப்பு தானம் பெறுவதற்கான வயது வரம்பு நீக்கம்
மாநிலங்களவையில் ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான விதிமுறைகளில் ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது.  அரசின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது நோயாளிகள் எந்த மாநிலத்திற்கும் சென்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும். இறந்த நன்கொடையாளரின் உறுப்புக்களை பெறுவதற்கு பதிவு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* 14.6லட்சம் பேருக்கு புற்றுநோய்
ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- தேசிய புற்றுநோய் பதிவேட்டின் படி, 2022ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.6லட்சமாக உள்ளது. இது 2025ம் ஆண்டில் 15.7லட்சமாக அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் மற்றும் துணை வகைகள்
ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்: நாட்டில் ஒமிக்ரான்  மற்றும் அதன் துணை வகைகள் அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த 4 மாதங்களில் நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 1900க்கும் மேற்பட்ட ஒமிக்ரான் துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

* நக்சல் வன்முறை 77சதவீதம் குறைவு
மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்:  நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் நக்சல் வன்முறை 77சதவீதம் குறைந்துள்ளது. அது தொடர்பான சம்பவங்களில் உயிரிழப்புகள் எண்ணிக்கையானது 90சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 96 மாவட்டங்களில்  465 காவல்நிலையங்களில் நக்சல் வன்முறை சம்பவங்கள் பதிவானது 2022ம் ஆண்டில் 45 மாவட்டங்களில் 176 காவல்நிலையங்களில் மட்டுமே நக்சல் வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

* புதிய மாநிலம் இல்லை
ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்: புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு  கோரிக்கைகள் அரசுக்கு வருகின்றது. எனினும் புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான எந்த முன்மொழிவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை.

* சட்டங்களை திருத்த குழு
ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்: குற்றவியல் சட்டங்களில் விரிவான திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக டில்லி தேசிய பல்லைக்கழக துணை வேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச லெப்டினனட் கவர்னர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்திய தலைமை நீதிபதி, பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆலோசனைகளையும்  உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

* 685 காவல் நிலையங்களில் தொலைபேசி கூட இல்லை
மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ``நாடு முழுவதும் 17,535 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 63 காவல் நிலையங்களில் வாகனங்கள் இல்லை. 628ல் தொலைபேசி கூட கிடையாது. 285ல் வயர்லெஸ் மற்றும் மொபைல் போன் இல்லை,’’ என்று தெரிவித்தார்.

Tags : Parliament , Parliament drops...
× RELATED இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.....