- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
- புது தில்லி
- பாராளுமன்ற பருவமழை அமர்வு
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- தின மலர்
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நாளை மறுநாள் (23ம் தேதி) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும். இதில், கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து, நாளை மறுதினம் ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இக்கூட்டத்தொடரில் 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட 6 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு, அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் இதில் பல்வேறு கேள்விகளை கேட்டு ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதே சமயம், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக எழுப்பும் என்றும் அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளார். இதுவரை பாஜவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் செயல்பட்ட பிஜூ ஜனதா தளம் தற்போது எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்திருக்கிறது. இதற்கிடையே, இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் பிரச்னைகளை அறிவதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அவைத்தலைவர் இருக்கையில் அமர்பவரின் உத்தரவுகளை எம்பிக்கள் அவையிலோ, வெளியிலோ விமர்சிக்கக் கூடாது. அவையில் பதாகைகளை காட்டக் கூடாது. நாடாளுமன்ற பழக்க வழக்கங்கள், மரபுகள், நடத்தை விதிகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவையில் ‘நன்றி’, ‘ஜெய் ஹிந்த்’, ‘வந்தே மாதரம்’ அல்லது வேறு எந்த முழக்கங்களையும் எழுப்பப்படக்கூடாது. உள்நோக்கங்கள் கொண்ட வார்த்தைகள், யாரையும் புண்படுத்தும் படியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட வார்த்தை அல்லது பேச்சு நாடாளுமன்றத்திற்கு புறம்பானது என்று அவைத் தலைவர் கருதினால், அது பற்றி எந்த விவாதத்தையும் எழுப்ப முயற்சிக்காமல் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் அவையில் நுழையும்போதும், வெளியேறும்போதும், அவைத்தலைவருக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். மற்ற உறுப்பினரிடமோ, அமைச்சரிடமோ கேள்வி எழுப்பும் எம்பிக்கள், அதற்கான பதிலை சம்மந்தப்பட்ட உறுப்பினர் தரும் போது கட்டாயம் அவையில் இருக்க வேண்டும்’ என கூறி உள்ளது.
The post மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.