இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 3வது சுற்றில் கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் (22 வயது, 36வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு (20 வயது, 77வது ரேங்க்) 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஹடாட் மாயாவை (26 வயது, 13வது ரேங்க்) 2 மணி, 19 நிமிடம் போராடி வென்றார். 4வது சுற்றில் ஸ்வியாடெக் - எம்மா மோதவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி வீராங்கனைகள் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), கரோலினா முச்சோவா (செக்.), வார்வரா கிரெச்சோவா (ரஷ்யா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), பவுலா படோசா (ஸ்பெயின்), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோர் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), டானில் மெத்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஸ்டான் வாவ்ரிங்கா (சுவிஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே தனது 3வது சுற்றில் 6-7 (6-8), 2-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜாக் டிரேப்பரிடம் போராடி தோற்றார்.