ஆவடி: ஆவடி, அம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தவதற்காக ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 10 மூட்டைகள் கொண்ட குட்கா, ஹான்ஸ் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திப்பட்டு சோதனைசாவடியில் ஆவடி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி வழியாக வந்துகொண்டிருந்த சரக்கு ஆட்டோவை மறித்து பரிசோதனை செய்தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன.
அதை பிரித்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதை பொருட்களுடன் பிடிபட்டவர்களை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், போதை பொருட்கள் கடத்தியவர்கள் அம்பத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த குலாம் மொய்தீன் (34), நெல்லையை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (25) என தெரிய வந்தது. இவர்கள் மொத்தமாக போதை பொருட்களை வாங்கி வந்து ஆவடி, அம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.