×

திருத்தணி அருகே சோகம் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி: மற்றொரு குழந்தை சிகிச்சைக்கு அனுமதி

திருத்தணி: திருத்தணி அருகே காசிநாதபுரம் கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு 7வயது சிறுவன் பலியானது. மற்றொரு குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வீடுவீடாக சென்று சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தணி ஒன்றியம் காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்-மாலா தம்பதியினர். இவர்களுக்கு கவின் (எ) தேவகுமார்(7) ஏழில்இனியா(2) என இரு குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், கடந்த, 8ம் தேதி தேவகுமாருக்கு திடீரென காய்ச்சல் வந்ததால், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மறுநாள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 10ம் தேதி மாலை தேவகுமார் இறந்தார்.

இந்நிலையில்,  எழில்இனியா என்ற இரண்டாவது குழந்தைக்கும் நேற்றுமுன்தினம் காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, ரத்த பரிசோதனை சோதனை செய்தனர். அதில், ஏழில்இனியாவிற்கு டெங்கு காய்ச்சல் என தெரிய வந்தது. தொடர்ந்து, ஏழில் இனியாவை அவரது பெற்றோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செல்வகுமார் உத்தரவின் பேரில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் அன்றே காசிநாதபுரம் கிராமத்தில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு, குடிநீர் தரம் பரிசோதித்தல் மற்றும் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி பிளிச்சிங் பவுடர்  தூவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் காசிநாதபுரத்திற்கு சென்று சுகாதார பணிகளை முடக்கிவிடப்பட்டுள்ளனர்.

Tags : Tiruthani , Boy dies of mysterious fever near Tiruthani: Another child admitted for treatment
× RELATED திருத்தணியில் கனமழை ரயில் நிலையம்...