சென்னை: தமிழகத்தில் முகூர்த்த நாள்கள் குறைந்ததால், கோயம்பேட்டில் மார்க்கெட்டி பூக்கள் தேங்கியது. இதனால், வழக்கத்தை விட மிக குறைந்த விலையில் விற்பனையாது. தமிழகத்தில், கடந்த 9ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், கோயம்பேடு பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.600க்கும், காட்டுமல்லி ரூ.500க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், அரளி பூ ரூ.200க்கும் சாமந்தி ரூ.100க்கும் சம்பங்கி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் முகூர்த்த நாள் மற்றும் விஷேச நாட்கள் குறைந்ததால் நேற்று காலை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ ஐஸ் மல்லி, காட்டுமல்லி, மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும், அரளி பூ ரூ.150க்கும், சாமந்தி ரூ.80க்கும் சம்பங்கி ரூ.40க்கும், பன்னீர் ரோஸ் ரூ.70க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘முகூர்த்த நாட்கள் முடிந்த நிலையில், அனைத்து பூக்களின் விலை திடீர் என்று குறைந்துள்ளது. இதனால், சென்னை புறநகர் சில்லரை பூ வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கி சென்றனர்’ என கூறினார்.