×

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு: மார்ச் 20ல் விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு..!!

டெல்லி: தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தெலுங்கானாவிலும் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இதனிடையே பல்கலைக்கழக பொது ஆள் சேர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் தமிழிசையை கண்டித்து பிஆர்எஸ் கட்சியின் மாணவர் அணியினர் ராஜ்பவனை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தமிழிசைக்கு உத்தரவிடக்கோரி தெலுங்கானா அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் முறையிட்ட மூத்த வழக்கறிஞர், 10 மசோதாக்கள் ஆளுநர் தமிழிசையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால் அவசர வழக்காக இதனை விசாரிக்க வலியுறுத்தினார். அதையடுத்து தெலுங்கானா அரசின் மனுவை வரும் 20ம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

ஆளுநர் தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியில் இருந்து எந்த மசோதாவிலும் கையெழுத்திடவில்லை என மனுவில் கூறியுள்ள தெலுங்கானா அரசு, ஆளுநரின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Governor ,Tamilisai ,Supreme Court ,Chief Justice , Tamilisai, Government of Telangana, March 20, Supreme Court
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...