×

தேனி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

*ஐகோர்ட் கிளை உத்தரவின் படி அதிகாரிகள் நடவடிக்கை

தேனி : தேனியின் பிரதான கால்வாயான ராஜவாய்க்கால் கால்வாய் ஆக்கிரமிப்புகளை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர்.
தேனி நகரில் கொட்டக்குடி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் ஒருபகுதியில் மதகு மூலம் ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தேனி நகரில் உள்ள நகராட்சி மயானம் அருகே இந்த ராஜவாய்க்கால் துவங்குகிறது. இங்கிருந்து சுமார் 15 மீட்டர் அகலத்தில் தேனி நகர் பழைய பஸ்நிலையம் வழியாக சுமார் 2.5 கிமீ தூரத்தில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை இந்த ராஜவாய்க்கால் உள்ளது.

தேனியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக மிகத்தெளிந்த நீரோடையாக இந்த கால்வாயில் நீர் சென்றுள்ளது. அப்போது தேனி நகர வாசிகள் இந்த கால்வாயில் இறங்கி குளித்ததை இன்றளவும் நினைவு கூர்ந்து வருகின்றனர். சராசரியாக 15 மீட்டர் அகலமான அதாவது சுமார் 50 அகலமுள்ள இந்த கால்வாயினை காலப்போக்கில் வணிக நிறுவனங்கள், மற்றும் பொதுமக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இதில் நகராட்சி தன் பங்கிற்கு சில ஆக்கிரமிப்புகளை செய்தது. இதன்காரணமாக ராஜவாய்க்கால் 50 அடி அகலமென்பது 10 அடியாக சுருங்கி சாக்கடை கழிவு நீரோடையாக மாறிப்போனது. மேலும், தேனி பழைய பஸ்நிலையம் பகுதியில் நீர் வழிந்தோட வழியில்லாமல் போனது.

ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள், 28 பெரிய வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள், 25 வணிக நிறுவனங்களின் தற்காலிக கூடாரங்கள், மற்றும் நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டிடங்கள், வாகன காப்பகங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளன.

ராஜவாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு 10 அடியாக சுருங்கிப்போனதால் மழைகாலத்தில் தேனி நகர் மதுரை சாலையில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் மழைநீர் வெள்ளம் தேனி நகர் மதுரை சாலையிலும், தேனி நகர் சுப்பன்தெரு திட்டச்சாலையில் உள்ள பட்டா வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் சாக்கடையோடு கலந்து வருவது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற சமயங்களில் தேனி நகர வாசிகள் சிரமமடைந்து வந்தனர். எனவே இந்த ராஜவாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நீர்நிலையை ஏற்படுத்த வேண்டும் என தேனி நகர மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தேனி நகரின் பிரதான கால்வாயான ராஜவாய்க்கால் கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேனியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜதுரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு மனுத்தாக்கல் செய்தார். இவருடைய மனுவினை விசாரித்த இருநீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஜனவரி 12ம் தேதி உத்தரவிட்டது. இதில் வருகிற 4 மாதங்களுக்குள் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சிக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இதன்காரணமாக கடந்த மாதம் தேனி மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநில கோட்ட பொறியாளயர்கள், தேனிஅல்லிநகரம் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினையடுத்து, தேனி நகரில் உள்ள ராஜவாய்க்காலில் மொத்தமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எனவும், இதற்காக முதல்கட்டமாக ஆக்கிரமிப்பில் அரசு துறை இருந்தால் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் இருந்தால் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பினை எடுத்து விடுவது எனவும், தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி நோட்டீஸ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்ட நாளில் இருந்து 21 நாள் கழித்து, ஆக்கரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றாவிட்டால் வருவாய்த் துறை உதவியுடன், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தேனி பழைய நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. இதில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த கட்டணக்கழிப்பறை ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் இப்பகுதியில் இருந்த வணிக கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. இதேபோல, தேனி பழைய பஸ் நிலையத்திற்குள் கம்பம், போடி பஸ்கள் நிற்கும் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

இது குறித்து பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்துவிடம் கேட்டபோது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியுள்ளோம். இதில் முதலில் அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பு வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கிய பிறகு, ஆக்கிரமிப்பு குடியிருப்புகளும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முழுமையாக அகற்றப்பட உள்ளது என்றார்.

பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து 100க்கும் மேற்பட்ட வீடுகள், 28 பெரிய வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள், 25 வணிக நிறுவனங்களின் தற்காலிக கூடாரங்கள், மற்றும் நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டிடங்கள், வாகன காப்பகங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளன.  நேற்று முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருப்போர் திடீரென தேனி நகர் பங்களாமேடு மதுரை சாலையில், பாரஸ்ட் ரோடு சந்திப்பில்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேனி­- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, தேனி தாசில்தார் சரவணபாபு, டிஎஸ்பி பார்த்திபன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதற்கட்டமாக வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை ஆக்கிரமிப்பு அகற்ற மாட்டோர் என உறுதி அளித்ததையடுத்து, சாலைமறியலை கைவிட்டுச் சென்றனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Theni ,Rajawaikal , Theni: As per the order of the High Court, the public works department has encroached on Rajawaikal canal, the main canal of Theni.
× RELATED திருநங்கைகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது