×

ஏலகிரி மலையில் நிலாவூர் பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்

ஏலகிரி : சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் உள்ள பண்டேரா பறவைகள் சரணாலயத்தில் திரண்ட  சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்  தலங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.  ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தின் அருகில் பொன்னேரி அடுத்து  சுமார் 1,410 மீட்டர் உயரத்தில் 14  கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு, அதற்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு  இயற்கை எழில் மிகு மலையாக திகழ்கிறது. மேலும், 14 கிராமங்களை உள்ளடங்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

ஏலகிரி மலை, சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குவதால், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், முக்கிய சுற்றுலா தலங்களான படகு  இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, பறவைகள் சரணாலயம், மூலிகை பண்ணை, செல்பி பார்க், சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான  தலங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நிலாவூர் பகுதியில் அமைந்துள்ளது பண்டேரா பறவைகள் சரணாலயம். இதில், செல்லப் பிராணிகள் மனிதர்களோடு இயற்கையாக பழகுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்கு வருகின்றனர். இந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள், அரிய வகை முயல்கள், பாம்புகள், உலகிலேயே மிக சிறிய குரங்கு,  எலிகள், மிகப்பெரிய தவளை, மிகப்பெரிய பல்லி மற்றும் மீன் வகைகள், நெருப்புக்கோழி, வான்கோழி, ஆடுகள், குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு உள்ளது.

இதில், பொக்கோ  பறவை, சைபிரேனேசி என்ற நாய்கள் சுற்றுலா பயணிகளிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவைகள். மேலும்,  பிஸ்பா என்னும் மீன் தொட்டியில் சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும், தொட்டியில் கால்களை வைத்தால் பாதங்களை மீன்கள் கடிப்பது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும், மிக்சிகன் வகையான பாம்பு வகைகளை கையில் பிடித்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். மார்மோசெட் என்ற குரங்கு உலகத்திலேயே சிறிய வகை குரங்கு, வெளிநாட்டு வகை மிக பெரிய ஓணான்கள், மிக பெரிய  பல்லி, பேயர்டேட் டாராகன், உள்ளிட்டவை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

 மேலும்  7டி  சினிமா, நெட் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். மேலும், பறவைகள் சரணாலயத்திற்கு வந்தால் செல்லப் பிராணிகளோடு விளையாடுவது மன கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதாக   சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.  இவை அனைத்தையும் காண ₹250 முதல் ₹450 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏலகிரி மலையில் நிலாவூர் பகுதியில் உள்ள படகு இல்லத்தையும், இயற்கை பூங்காவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilavur ,Elagiri Hills , Elagiri: Tourists flock to the Bandera Bird Sanctuary in the tourist destination of Elagiri Hills to have fun with their families.
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின்...