×

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும்: ஏலகிரி மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா தொடங்குவது எப்போது?

ஏலகிரி: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகரி மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா தொடங்குவது எப்போது? உள் விளையாட்டு அரங்கம் பணிகளை தீவிரப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலை சுமார் 1410.60 மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு, அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. 14 கிராமங்களையும் உள்ளடக்கிய ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

திருப்பத்தூர், வாணியம்பாடி நெடுஞ்சாலை அருகில் மிக உயர்ந்த மலை பகுதியில் ஏலகிரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலையில் சீதோஷ்ண நிலை நிலவுவதால் இப்பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வாழும் அனைத்து மக்களும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஏலகிரி மலையில் விவசாயம் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. இங்கு அனைத்து ஊர்களிலும் விவசாயம், கறவை மாடுகள், உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலையில் நிலம் வைத்திருப்பவர்கள் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். நிலம் இல்லாதவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். ஏலகிரி மலையில் பாரம்பரியமாக நெல் சாகுபடி, சாமை, கேழ்வரகு, சோளம், போன்ற விவசாயம் இன்னும் மலைப்பகுதிகளில் செய்து வருகின்றனர். மேலும் பூ வகையான, பட்டன் ரோஸ், செண்டு மல்லி, சாமந்தி பூ, சம்பா பூ, போன்ற விதவிதமான பூ வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடுகள் வளர்த்தல், கறவை மாடுகள், கோழி வளர்த்தல், உள்ளிட்டவை முக்கிய தொழிலாக செய்து வருகின்றன. மேலும் இந்த மலைப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் கூலி தொழிலுக்கும் சென்று வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஏலகிரி மலையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு, பாண்டா செல்பி பார்க், மங்களம் சுவாமி மலையேற்றம், கதவநாச்சியம்மன், உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

மேலும் இங்கு திறந்தவெளி திரையரங்கு, இயற்கை பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி, நீர்வீழ்ச்சி நடனம், உள்ளிட்டவை பயன்பாட்டில் இல்லாமல் முட்புதர்கள் மண்டி மூடப்பட்டு காணப்படுகிறது. இருப்பினும் நிலாவூர், பள்ளகணியூர் இடைப்பட்ட காரப்பாரை என்ற இடத்தில் 100 ஏக்கரில் பொட்டானிகல் கார்டன் (தாவரவியல் பூங்கா) அமைப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தாவரவியல் பூங்கா அமைக்கும் பணியை விரைவில் முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், அதிக சுற்றுலா பயணிகள் வரக்கூடும்.

எனவே சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் விரைவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்தும் ராயனேரி கடுக்காடு வட்டத்தில் 7 ஏக்கர் சாகச விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், அப்போதைய கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இந்த சாகச விளையாட்டு தளமானது ₹3 கோடி அமைக்க திட்டமிடப்பட்டது. இப்படி மிகப்பெரிய சுற்றுலா தளத்தினை அமைக்க அரசு இடத்தை தேர்வு செய்தது.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்காவையும், சாகச விளையாட்டு தளத்தின் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உள்விளையாட்டு அரங்கம், பணியினையும் விரைவில் முடிக்க விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ஏலகிரி மலையில் சீதோஷ்ண நிலை இருப்பதால் மற்ற பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் வெளிப்பகுதி மக்கள் ஏலகிரி மலையில் இடம் வாங்கி அங்கே குடியேறி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் மலைவாழ் மக்கள் குறைந்து வெளிப்பகுதிகளிலிருந்து வந்த மக்கள் ஏலகிரி மலையில் அதிகமாக பரவி வருகின்றனர். ஏலகிரி மலை மக்கள் நிலங்களை விற்று வருவதால் வெளிநாட்டினர் அதிகமாக மலைப்பகுதிக்குள் வந்துள்ளனர். மேலும் சிறிது காலத்திற்குப் பின்னர் ஏலகிரி மலை மக்கள் பழங்குடியினர் இல்லாமல், மற்ற பகுதிகளில் வாழும் மக்கள் ஏலகிரி மலையில் குடியேறும் நிலைக்கு மாற வாய்ப்புள்ளது.

ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலாத்தலம் என்பதால் நிலத்தின் விலை அதிகமா இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்தும், அரசியல்வாதிகளும் அதிக நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர். இதனால் கனிம வளங்கள் சுரண்டப்படுகிறது. இயற்கை வளங்கள் மாறி வருகிறது. எனவே ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா, சாகச விளையாட்டு, உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதோடு, ஏலகிரிமலையில் இயற்கை வளங்களை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும்: ஏலகிரி மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா தொடங்குவது எப்போது? appeared first on Dinakaran.

Tags : Tirupattur District ,Elagiri Hills ,Elagiri ,Elagari Hill ,Tirupathur district ,Elagiri Hill ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!