வீராணநல்லூர் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் பிரச்னை-சாமி வந்து ஆடிய பெண்ணால் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு : காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் ஊமை காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல வருடங்களாக இரண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். சில ஆண்டுகளாக கோயில் இடிந்து பாழடைந்து கிடந்தது. இந்நிலையில் ஊராட்சி, பொதுமக்கள் சார்பில்  கோயிலை புனரமைத்து கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஊர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் கோயிலில் தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அரசபாண்டியன் தலைமையில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற தயாராக இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை யார் நடத்துவது என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா தரப்பினருக்கும், தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அரசபாண்டியன் தரப்பினருக்கும் இடையே பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது.

அதனையடுத்து அதிகாரிகள் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரபினரிடையே பொதுமக்கள்  முன்னிலையில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா அனைவரிடமும் சென்று வசூல் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதனால் ஊர் பொதுமக்கள் அதனை மறுத்து ஊர் சார்பில் கூட்டம் போட்டு இரண்டு தரப்பினரும் வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தை ஊர் பொதுமக்கள் சொந்த செலவில் நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாசி மாதம் கடை நாள் என்பதால் கோயில் முன்பு பந்தக்கால் போட்டு முகூர்த்தம் செய்ய வந்தனர்.

அப்போது தகவல் அறிந்து வந்த போலீசார் கோயிலை திறக்க அனுமதி அளிக்காததால் பொதுமக்கள் போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கோயில் அருகே காத்திருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் கோயிலை போலீசாரே திறக்க வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு முடிவு சொல்ல வேண்டும் என சாமி வந்து ஆடினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர், காவல் துறையினர் இருதரப்பையும் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: