×
Saravana Stores

டெல்டாவை அதிரவைத்தவன் தொழிலதிபர்களின் கூலிப்படை தலைவன் ரவுடி சாமி ரவி சரண்: கொலை செய்ய கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்; திடுக் தகவல்

தஞ்சாவூர்: தமிழகத்தில் பிரபல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று கொலை செய்யும் கூலிப்படை தலைவன் ரவுடி சாமி ரவி போலீசில் சரண் அடைந்தார். தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் புதுக்கோட்டையில் ரவுடி துரை மற்றும் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி திருவேங்கடம் ஆகியோர் போலீஸை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் ரவுடி பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலையத்தில் பிரபல ரவுடி சாமி ரவி நேற்றுமுன்தினம் மாலை சரணடைய போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அங்கு இரவு 9 மணி வரை அவர் ஆஜராகவில்லை. பின்னர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரணைடைய போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு சில நபர்களுடன் ரவுடி சாமி ரவி, திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். தஞ்சாவூர் ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் ரவுடி சாமி ரவியிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘ரவுடி சாமி ரவி ஒரு பொறியியல் பட்டதாரி. ஆங்கிலம், இந்தியில் சரளமாக பேசக்கூடியவர். திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளவர். டெல்டா உள்பட பல்வேறு பகுதிகளில் கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர். இவர் மீது 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆங்கில படங்களை பார்த்து ஸ்கெட்ச் போடும் வித்தைகளை கற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் தங்கியுள்ளார். மீண்டும் திருச்சி வந்த சாமி ரவி, தன்னை காப்பாற்றி கொள்வதற்காக, சாதி அமைப்பு ஒன்றில் பொறுப்பை வாங்கியுள்ளார். அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் அவரது மாமனார் இருப்பதால் தற்போது வரை அவர்கள் அவருக்கு பக்கபலமாக உள்ளனர். மேலும், ரவுடி குரங்கு குமார் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

தமிழகத்தில் பிரபல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு கொலை செய்யும் கூலிப்படை கும்பலின் தலைவனாக மாறினார் ரவுடி சாமி ரவி. தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்த பல கொலைகளுக்கு அவர் மூளையாக இருந்தாலும் தனது பெயர் போலீஸ் வட்டாரத்தில் அடிபடாமல் பார்த்து கொண்டார். இந்நிலையில் திருச்சி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் அப்போது ஸ்பெஷல் டீமில் இருந்த இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், ரவுடி சாமி ரவியிடம் ராமஜெயம் கொலைக்கு ஏதாவது தொடர்பு உண்டா என விசாரித்துள்ளார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையும் இவரிடம் நடந்தது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்கல்லணை அருகே தோகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வி.எஸ்.எல்.குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாமி ரவிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், 4 மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்தார். தற்போது ரவுடிகளை போலீசார் கைது செய்து வரும் நிலையில், அவர் சரணடைந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின் நேற்று மாலை திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ரவுடி சாமி ரவி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ஹரிராம், அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பின் ரவுடி சாமி ரவி புதுக்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post டெல்டாவை அதிரவைத்தவன் தொழிலதிபர்களின் கூலிப்படை தலைவன் ரவுடி சாமி ரவி சரண்: கொலை செய்ய கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்; திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rowdy Sami Ravi Charan ,Delta ,Thanjavur ,Rowdy Sami Ravi ,Tamil Nadu ,Pudukottai ,Rowdy Sami Ravi Saran ,Dinakaran ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக...