×

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு; நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ெதாடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பிரதமர் மோடியின் பதில் உரையும் இடம்பெற்றன. அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதியின் அமர்வு கடந்த பிப். 13ம் தேதி முடிவுற்றது. தொடர்ந்து, முதல் பாதி அமர்வு நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 13ம் தேதி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது.  ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சி தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுவதாக கூறப்படுவதால், இந்த கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

Tags : Meeting ,Parliament ,Union Government , 2nd Session of Budget Session; Parliament meets tomorrow: Opposition strategizes against Union government
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...