×

ஐதராபாத் நகர தெருக்களில் அமித் ஷாவை வரவேற்கும் ‘மார்பிங்’ பேனர்கள்: கே.கவிதா ஆஜரான நிலையில் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத் நகர தெருக்களில் அமித் ஷாவை வரவேற்கும் விதமாக மார்பிங் செய்யப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 54வது எழுச்சி  நாள் அணிவகுப்பு இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெலங்கானா  வருகிறார். அதையடுத்து தெலங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்)  கட்சியின் நிர்வாகிகள் ஐதராபாத் நகர்ப் பகுதியில் சர்ச்சைக்குரிய பிளக்ஸ்  பேனர்களை வைத்துள்ளனர்.
 
அதில் எதிர்கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து குற்றவழக்கின் நெருக்கடியில் இருந்து தப்பிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாராயண் ரானே, சுவேந்து அதிகாரி, சுஜனா சவுத்ரி, ஈஸ்வரப்பா உள்ளிட்டோரின் முகங்களுடன் கூடிய மார்பிங் செய்யப்பட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் சமூக ஊடகங்களில் ‘வாஷிங் பவுடர் நிர்மா! இது கர்மா அமித் ஷா ஜி’ என்றும், ‘வெல்கம் டு ஐதராபாத்’ என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. முன்னதாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று டெல்லி அமலாக்கத்துறை முன் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகளான கே.கவிதா ஆஜரான நிலையில், இன்று ஐதரபாத்தில் அமித் ஷாவை கிண்டல் செய்யும் வகையில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Amit Shah ,Hyderabad ,K. Kavitha , 'Morphing' banners welcome Amit Shah on Hyderabad city streets: K. Kavita's presence stirs excitement
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!