×

நாங்குநேரி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: குளம் போல் தேங்குவதால் சுகாதார கேடு

களக்காடு: நாங்குநேரி அருகே குழாய் உடைப்பால் தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். திசையன்விளை பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பத்தமடை தாமிரபரணி ஆற்றில் இருந்து சிங்கிகுளம், பாணாங்குளம், மூன்றடைப்பு, நாங்குநேரி வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் குளம் போல் தேங்குகிறது. இதில் குப்பைகளும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் கொசு மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாயமும் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நான்குவழி சாலை அருகே தண்ணீர் தேங்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் குடிநீரின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே குழாய் உடைப்பை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Nanguneri , Nanguneri, drinking water is wasted due to broken pipe, health hazard
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...