ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், பெரணி இல்லத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள், மலர் செடிகள், மரங்கள், பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இதனை காணவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சி மாணவர்கள் வந்துச் செல்கின்றனர்.
இப்பூங்காவில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள பல்வேறு தாவரங்கள் உள்ள நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் அதிகளவு வருகின்றனர். பூங்காவில் பெரணி செடிகளுக்கு என்று ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள பெரணி செடிகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் காணப்படும் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலர்செடிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆனால், சிலர் மட்டுமே அரிதான இந்த பெரணி செடிகள் மற்றும் கள்ளிச்செடிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோடை சீசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பூங்காவில் தற்போது நாற்று நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மலர்களே இன்றி பூங்கா காட்சியளிக்கிறது. கண்ணாடி மாளிகையில் மட்டுமே பால்சம், பிகோனியா போன்ற தொட்டியில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையே கண்டு ரசித்து செல்கின்றனர். இது தவிர பூங்காவில் பச்சை பசேல் என காட்சியளிக்கும் பெரணி இல்லத்தில் உள்ள பெரணி செடிகளை தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.