×

சின்னாளபட்டி பேரூராட்சியில் சமுதாய கூடங்கள் புதுப்பிக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சியில் 2 சமுதாய கூடங்கள் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சிக்கு கடந்த அக்டோபர் 1ம் தேதி ஆய்வு செய்ய வந்த பேரூராட்சிகளின் முன்னாள் ஆணையாளர் செல்வராஜ், உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் ஆகியோர் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த 2 சமுதாய கூடங்களை (திருமண மண்டபம்) புதுப்பிக்க உத்தரவிட்டதோடு ஆதிதிராவிடர் காலனி, கவுண்டர் தெரு பகுதிகளில் உள்ள 2 கழிப்பறைகளையும் சீரமைக்க உத்தரவிட்டார்.

மேலும் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுக்கு மூடி இல்லாமல் இருப்பதாலும், அதன் பக்கவாட்டு சுவர் உயரம் குறைவாக இருப்பதாலும் காமராஜர் அணையிலிருந்து தண்ணீர் மறுகால் செல்லும் போது கழிவுநீர்களும் கிணற்றுக்குள் வருவதை அடுத்து திறந்தவெளி கிணற்றுக்கு இரும்பு மூடி போடவும், பக்கவாட்டு தூண்களை புதிதாக கட்டவும் உத்தரவிட்டனர். இதையடுத்து சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு சமுதாய கூடங்கள், கழிப்பறைகள் புதுப்பித்தல், திறந்தவெளி கிணறுக்கு மூடி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

ஆனால் டெண்டர் விடபட்டு 40 நாட்கள் ஆகியும் பணிகளை தொடங்காததால் தற்போது ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கசடுகள் (கழிவுகள்) கலந்து வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 10 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறை அமைச்சராக இருந்த போது கட்டி கொடுத்த 2 சமுதாய கூடங்களும் செயல்படாமல் இருப்பதால் திருமணம், காது குத்து உள்ளிட்ட இதர விழாக்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக வாடகைக்கு தனியார் திருமண மண்டபத்தை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர ஆதிதிராவிடர் காலனி பகுதியிலும், கவுண்டர் தெரு பகுதியிலும் கழிப்பறைகளை சீரமைக்காததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தகாரரை விரைவாக சமுதாய கூடங்கள், கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணிகளை துவங்கி முடிக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தை மாதத்திற்குள் தயாராகுமா?
வழக்கமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் தான் திருமணம், காது குத்து, பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவார்கள். ஆனால் சின்னாளபட்டியில் சமுதாய கூடங்களை புதுப்பிக்கும் பணிக்கு டெண்டர் விட்டு ஒரு மாதம் காலமாகியும் பணிகள் தொடங்காததால் தை மாதத்தில் விழா நடத்த தயாராகும் பொதுமக்களுக்கு குறைந்த வாடகையில் பேரூராட்சி சமுதாய கூடம் கிடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தாரரை விரைந்து பணிகளை துவங்கி தை மாதத்திற்குள் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnalapatti , Chinnalapatti municipality, community hall renovation work, public demand
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...