×

மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த 2 நாள் கருத்தரங்கம்

சென்னை: மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது.  சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையும், இந்திய சொசைட்டி ஆப் நியூக்கிளியர் மெடிசன் அமைப்பும் இணைந்து, ‘மாஸ்டர் கிளாஸ் இன் தொரனோஸ்டிக்ஸ்’ எனும் புற்றுநோய் தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் மருத்துவமனை அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மியாட் மருத்துவமனயின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: புற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும்போது, முடி உதிர்தல், வயிற்றுப் போக்கு, உடல்சோர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சையே வேண்டாம் என ஓடும் நிலையை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். மருத்துவர்கள் நோயாளிகளின் மனநிலைப்படி வைத்தியம் பார்க்கும்நிலை வர வேண்டும்.  புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய தீர்வாக, நியூக்கிளியர் மெடிசனான ஐசோடோப் கொடுத்து பக்க விளைவுகள் எதுவும் இல்லாத வைத்தியம் பார்க்க முடியும். இந்த ஐசோடோப்பை வாய் மூலமாகவும் சாப்பிடலாம். சிரிஞ்சு மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.


புற்றுநோய் முற்றிய நோயாளிக்கு ஐசோடோப் சிகிச்சை மிகவும் பயனுள்ளது. புற்றுநோய் சிகிச்சை பெற்றவர் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புற்றுநோய்  சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஐசோடோப் புற்றுநோய் சிகிச்சை முறை மிகவும் துல்லியமானது. இது எங்கு புற்றுநோய் உள்ளதோ அதை மட்டும் கண்டறிந்து, குணப்படுத்தக்கூடியது. இந்த 2 நாள் புற்றுநோய் கண்டுபிடிப்பு கருத்தரங்கில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, யு.எஸ்.ஏ., யு.கே. ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்திய நியூக்கிளியர் மெடிசன் அமைப்பைச் சேர்ந்த டாக்டர்கள் திருமூர்த்தி, குமரேசன் மற்றும் டாக்டர் சுமதி ஆகியோருக்கு பிரித்வி மோகன்தாஸ் நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.



Tags : Myatt Hospital ,Manappakkam , 2 day Seminar on Cancer Treatment at Myatt Hospital, Manappakkam
× RELATED உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 9 சவரன் பறித்த 2 பேர் சிக்கினர்