×

‘துரோகத்தின் அடையாளமே’ எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட பயணி மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

அவனியாபுரம்: துரோகத்தின் அடையாளமே என எடப்பாடியுடன் பயணம் செய்தபடி கோஷமிட்ட பயணியை அதிமுகவினர்  சரமாரியாக தாக்கியது மதுரை விமான நிலையத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி ஓடுதளத்தில் உள்ள பேருந்தில் ஏறி நுழைவாயிலை நோக்கி பயணித்தார்.

அப்போது அவருடன் பேருந்தில் வந்த ஒருவர் தன் செல்போனில், எடப்பாடி பழனிசாமியை முகநூல் நேரலையில் வீடியோ பதிவிட்ட படி பேசியதாவது: ‘‘எல்லோரும் பார்த்துக்குங்க... எதிர்க்கட்சி தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். திரு.எடப்பாடியார்...’’ என்றார். (உடனே எடப்பாடி பழனிசாமி கையசைக்கிறார்). தொடர்ந்து, ‘‘துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்தமிழக மக்களுக்கு எதிராக கொடுத்தவர்...’’ என கூறிக்கொண்டு இருக்கும்போதே, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரி வீடியோ பதிவிடுவதை தடுத்ததோடு, செல்போனையும் தட்டி விடுகிறார்.

பஸ்சை விட்டு இறங்கிய அந்த நபரை, எடப்பாடியை வரவேற்க கூடியிருந்த அதிமுகவினர் சரமாரியாக அடித்து, உதைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எம்.வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என தெரிய வந்தது. எடப்பாடியுடன் பேருந்தில் ஏறி, செல்போனில் வீடியோ எடுத்து, ‘‘துரோகியுடன் பயணம் செய்கிறோம்’’ என்ற தலைப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தொடர் விசாரணையில் ராஜேஸ்வரன் அமமுக நிர்வாகி என்பது தெரிந்தது. அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் நேற்று மாலை 5.15 மணியளவில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

* அடியாட்களுடன் வந்து மிரட்டல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசில் புகார்
சேலத்தில் ஓ.பி.எஸ். நியமித்த மாவட்ட செயலாளரான தினேஷ், நேற்றுமுன்தினம் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினார். இதனால் எடப்பாடி தரப்பினர், அதை கிழித்து எறிந்தனர். மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்தனர்.  மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் தினேசின் வீட்டையும் முற்றுகையிட சென்றனர். இதையடுத்து தினேஷ், நேற்று கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்,  எடப்பாடி அணியினர் அடியாட்களுடன் வந்து  ஓ.பி.எஸ் அணியில் செயல்படக் கூடாது, கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மாஜி அமைச்சர், எம்எல்ஏ தாக்கி கொலை மிரட்டல்
மதுரை விமான நிலையத்தில் தாக்கப்பட்ட ராஜேஸ்வரன், அவனியாபுரம் போலீசில் அளித்த புகாரில், ‘‘எடப்பாடியின் தூண்டுதலால், விமான நிலையத்திற்கு உள்ளே இருந்த சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் உள்பட 6 நபர்கள் என்னை கடுமையாக தாக்கினர். அதில்  எனது வலது கை சுண்டு விரல் உடைந்து விட்டது. ‘இன்று தப்பிய உன்னை  என்றாவது கொலை செய்வோம்’ என மிரட்டினர். எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் எனது ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு விரட்டினார்’’ என கூறியுள்ளார்.

Tags : Edappadi ,Madurai airport , A passenger raised a slogan against Edappadi as 'a symbol of betrayal' causing chaos at Madurai airport
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்