×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் தீவிர விசாரணை: வரும் 16ல் மீண்டும் ஆஜராக சம்மன்

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில், மதுபான உரிமம் தர லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பல்வேறு சோதனைகளைத் தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புதிய மதுபான கொள்கையின் மூலம் ஆதாயம் அடைவதற்காக ‘சவுத் குரூப்’ எனப்படும் தென் இந்தியாவைச் சேர்ந்த சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வரை லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமசந்திரன் பிள்ளையை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி எம்எல்சியுமான கவிதாவின் பினாமியாக இருப்பவர் என கூறப்படுகிறது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.


இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா நேற்று காலை ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.  பின்னர் கவிதா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த விசாரணையை தொடர்ந்து மீண்டும் வரும் 16ம் தேதி கவிதா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் விடுத்துள்ளது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இந்த வழக்கில் சிசோடியாவை போல தனது மகளையும் கைது செய்ய பாஜ முயற்சிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Enforcement Department ,Kavita ,Delhi , Enforcement department interrogates Kavita for 9 hours in Delhi liquor policy case: summons to appear again on 16
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...