இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ரூ.8 லட்சம் கோடி வர்த்தக இலக்கு

புதுடெல்லி: இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அதைத் தொடர்ந்து, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் பாரெலுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து பேசினர். இதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிப்பது என இரு அமைச்சர்களும் உறுதி ஏற்றுள்ளனர். தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ.2.4 லட்சம் கோடியாக உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுக்குள் ரூ.4 லட்சம் கோடி வரையிலும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல, இரு தரப்பு வர்த்தக மதிப்பு ரூ.8 லட்சம் கோடியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

* மதவழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது ஆஸ்திரேலியாவில் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நடந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசிடம் கவலை தெரிவித்தார். இதுகுறித்து நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட பன்முக கலாச்சார தேசம். எனவே மத தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பான எவரும் சட்டத்தின் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். மத வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை ஆஸ்திரேலியா பொறுத்துக்கொள்ளாது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு நான் உறுதியளித்தேன்’ என்றார்.

Related Stories: