கிறைஸ்ட்சர்ச்: ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடக்கும் இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், டாஸ் வென்ற நியூசி. முதலில் பந்துவீசிய நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன் குவித்தது (92.4 ஓவர்). அடுத்து களமிறங்கிய நியூசி. 2வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து திணறியது. டேரில் மிட்செல் 40, பிரேஸ்வெல் 9 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். கிட்டதட்ட 200 ரன் பின்தங்கிய நிலையில் இருந்த நியூசி.யை எளிதில் சுருட்டிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை வீரர்கள் பந்துவீசினர். பிரேஸ்வெல், கேப்டன் சவுத்தீ தலா 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப... நியூசி. 235 ரன்னுக்கு 7வது விக்கெட்டை பறிகொடுத்தது. எனினும் பொறுப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய மிட்செல் தனது 5வது சதத்தை விளாசி நம்பிக்கை அளித்தார். அவர் 102 ரன் எடுத்து லாகிரு குமாரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா வசம் பிடிபட்டார்.
பின்வரிசை வீரர்கள் மேட் ஹென்றி, நீல் வேக்னர் அதிரடியில் இறங்க நியூசி. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஹென்றி 104வது ஒவரில் 17 ரன், 105வது ஓவரில் 24 ரன் விளாசி மிரட்டினார். ஹென்றி 72 ரன் (75 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), வேக்னர் 27 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்க, நியூசி. முதல் இன்னிங்சில் 373 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (107.3 ஓவர்). இலங்கை தரப்பில் அசிதா 4, குமாரா 3, ரஜிதா 2 விக்கெட் எடுத்தனர். 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்துள்ளது. ஒஷதா 28, கேப்டன் கருணரத்னே 17, குசால் 14 ரன் எடுத்து டிக்னர் வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ 20, பிரபாத் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
