×

வழித்தடம் 3, 5ல் இயக்கப்படும் ரயில்களுக்காக ரூ.284 கோடியில் மாதவரம் பணிமனை அமைகிறது: மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தகவல்

சென்னை: வழித்தடம் 3 மற்றும் 5ல் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயில்களுக்காக ரூ.284 கோடியில் மாதவரம் பணிமனை அமைகிறது என மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ம் கட்ட மெட்ரோ ரயிலின் வழித்தடம் 5ல் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.284.51 கோடி மதிப்பில் மாதவரத்தில் அமைக்கப்பட்டு வரும் பணிமனையினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் பார்வையிட்டார். மாதவரத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனையில் 3 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் 110 மெட்ரோ ரயில்கள் நிறுத்தும் வகையில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிமனையில் 24 ரயில் நிறுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்கள் நிறுத்த 10 இருப்பு பாதைகளும், பழுது மற்றும் சுத்தம் செய்ய 7 இருப்பு பாதைகளும், மெட்ரோ ரயில்களை ஆய்வு செய்ய 7 இருப்பு பாதைகள் என மொத்தம் 24 இருப்பு பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு சோதனை ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும், தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் இந்த பணிமனை வடிவமைக்கப்படுகிறது. எதிர்க்காலத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயில்களுக்கான பணிமனையாக மாதவரம் பணிமனை செயல்படவுள்ளது. மாதவரம் மெட்ரோ ரயில் பணிமனை பணிகள் அனைத்தும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Madhavaram ,route 3 ,Metro Managing Director ,Siddique , Rs 284 Crore Madhavaram workshop for trains operating on route 3, 5: Metro Managing Director Siddique Informs
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்