தொட்டியம்: திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியை கிராமத்தை சேர்ந்த கொத்தனார் கோபி மகன் மவுலீஸ்வரன் (15) 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பகல் 12.30 மணியளவில் பள்ளி வளாக திடலில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள், தங்களுக்குள் சிறுசிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக தெரிகிறது.
இதில் தங்கள் மீது சிறுகற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மவுலீஸ்வரனை சக மாணவர்கள் 3 பேர் சேர்ந்து சரமாரி தாக்கியுள்ளனர். இதில் மாணவன் மவுலீஸ்வரன் தலை, அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக மவுலீஸ்வரனை கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மவுலீஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த மவுலீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் 2 மணியளவில் பள்ளியை முற்றுகையிட்டதோடு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-நாமக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் 3 மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், முசிறி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) முத்துச்செல்வன் பள்ளிக்கு நேரில் வந்து தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
