பணமோசடி தடுப்பு சட்ட விதிகளில் மாற்றம் நீதிபதிகள், ராணுவ அதிகாரிகளையும் அமலாக்கத்துறை விசாரிக்கும்: ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்ட விதிகளில் மாற்றம் செய்துள்ள ஒன்றிய அரசு, அமலாக்கத்துறையின் மூலம் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகளையும் கூட விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், பணமோசடி தடுப்பு சட்டம் - 2002 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட விதிகள் கடந்த 2005 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் மேலும் சில விதிகளை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. அதன்படி லாப நோக்கற்ற அமைப்புகளையும் (என்ஜிஓ), அரசியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களையும் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரமுடியும்.

இதுகுறித்து ஒன்றிய அரசின் நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளில் மாற்றங்கள் செய்தது தொடர்பாக கடந்த 7ம் தேதி ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, அரசியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், மூத்த அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகளையும் அமலாக்கத் துறை விசாரிக்க முடியும். அதேபோல் லாப நோக்கமற்ற அமைப்புகளின் தன்மை மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம் குறித்த பதிவை வங்கிகள் வைத்திருக்க வேண்டும். அமலாக்கத் துறைக்கு விசாரணை வளையத்தில் உள்ளவர்களின் வங்கி பரிவர்த்தனை பதிவுகளை வங்கி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பதிவுகளை விசாரணை அமைப்புகள் கோரினால் அவர்களுக்கு பகிர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: