மக்களவையில் மைக் அணைக்கப்படுவதாக புகார்லண்டன் பேச்சுக்காக ராகுலை விமர்சித்த துணை ஜனாதிபதி: மரபுப்படி நான் மவுனமாக இருக்க முடியாது என ஆவேசம்

புதுடெல்லி,மார்ச் 10: மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது மைக் அடிக்கடி அணைக்கப்படுவதாக லண்டனில் குறிப்பிட்ட ராகுல்காந்தியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சனம் செய்தார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் தொடர்பான புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெகதீப் தன்கர் பேசியதாவது:   நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நம்மில் சிலர்,  ஜனநாயகத்தை நியாயமற்ற முறையில் இழிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். எங்களை இழிவுபடுத்துவதாக நினைத்து, நமது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பையும் களங்கப்படுத்துகிறார்கள். இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

இந்த விவகாரத்தில் நான் மவுனம் காக்க முடியாது.   நாட்டிற்கு வெளியே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து குறித்து நான் மவுனம் கடைபிடித்தால், நான் அரசியலமைப்பின் தவறான பக்கத்தில் இருப்பேன்.   இந்திய நாடாளுமன்றத்தில் மைக்குகள் நிறுத்தப்பட்டதாகக் கூறுவதை நான் எப்படி புனிதப்படுத்துவது? அப்படிச் சொல்ல அவருக்கு எவ்வளவு தைரியம்? நான் அரசியல் கட்சி உறுப்பினர் இல்லை. நான் கட்சி சார்பான நிலைப்பாட்டில் ஈடுபடவில்லை. ஆனால் அரசியலமைப்பு கடமையில் நான் இருக்கிறேன். நான் மவுனம் கடைபிடித்தால், இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொண்ட பெரும்பான்மையான மக்கள் என்றென்றும் மவுனமாகி விடுவார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: