- அண்ணாமலை
- இந்தியாவின் துணை ஜனாதிபதி
- வெங்கையா நாயுடு
- இந்தியா
- பாஜக
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை ஜனாதிபதி
* அகில இந்திய பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி
* மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என வேதனை
சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசு துணை தலைவரும், பாஜவின் மூத்த தலைவருமான வெங்கய்யா நாயுடுவின் 75வது பிறந்த நாள் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புறக்கணித்த நிலையில் அகில இந்திய தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் அவர் 50 ஆண்டு காலமாக இந்தியாவிற்கு ஆற்றிய சேவை பணியை கொண்டாடும் விதமாக பாராட்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
வெங்கய்யா நாயுடுவை பொறுத்தவரை கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடத்திலும் அன்பாகவும், சகஜமாகவும் பழகக்கூடியவர். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களுக்கு வெங்கய்யா நாயுடு மீது நல்ல மரியாதை என்பது உள்ளது. அந்தவகையில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக என அனைத்து கட்சி தலைவர்களும் வெங்கய்யா நாயுடுவுடன் நல்ல உறவில் உள்ளனர். இதன் காரணமாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், பாஜக மூத்த நிர்வாகிகளான கரு.நாகராஜன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், தொழிலதிபர் நல்லிக்குப்புசாமி, பதம் விபூஷன் வைஜெயந்தி மாலா, பாடகி எஸ்.பி.சைலஜா, நடிகர் விஷால், நடிகை நமிதா மற்றும் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியும் நல்ல முறையில் நடந்து முடிந்தது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பாஜவினர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜவின் மூத்த தலைவரான வெங்கய்யா நாயுடுவின் விழாவிற்கு மாற்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட நிலையில் தமிழக பாஜ தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை சென்னையில் இருந்தும் இந்த விழாவிற்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்துள்ளதுதான் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.
வெங்கய்யா நாயுடுவின் விழாவிற்கு செல்லாமல் ஆலந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பங்கேற்று இருக்கிறார். இதன் மூலம் மற்றவர்களுக்கு தரக்கூடிய மரியாதைகூட இந்தியாவின் முன்னாள் குடியரசு துணை தலைவராக இருந்தவர், மோடி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக அங்கம் வகித்தவரான வெங்கய்யா நாயுவிற்கு தராமல் இருக்கிறாரே என்ற வேதனையில் பாஜவினர் புலம்பி தள்ளுகின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற படுதோல்விக்கு பிறகு வெளியில் தலைக்காட்ட முடியாமல் முன்னாள் மாநில தலைவர்களுடன் கிடுக்குப்பிடி சண்டையிட்டு வந்தார்.
மேலும், பாஜவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளுதலில் தொய்வு நிலை, கட்சியில் சிலரை நீக்குதல், சேர்த்தல் என செய்வதறியாது இருந்த நிலையில் சர்வதேச அரசியல் படிப்பிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ளதாக கூறினார். இதற்கு டெல்லி மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருக்க நீண்ட இழுபறிக்கு பின்னரே அகில இந்திய தலைமை பச்சைக்கொடி காட்டியது. இதன் பின்னர் அடுத்த பாஜ மாநில தலைவராக நயினார் நாகேந்திர நியமிக்கப்பட உள்ளார் என்று பேசப்பட்ட நிலையில், பாஜவின் மூத்த தலைவரின் விழாவை அவர் புறக்கணித்திருப்பது மாநில நிர்வாகிகள் மட்டுமின்றி, அகில இந்திய தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் விழாவை புறக்கணித்த அண்ணாமலை appeared first on Dinakaran.