×

வேலூர், ராணிப்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை 2 நாள் நிறுத்தம்: மாதனூரில் பைப்லைன் சீரமைப்பு

வேலூர்: மாதனூரில் பைப்லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மேட்டூரில் இருந்து ராட்சத பைப்லைன் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பைப்லைன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரதான இரும்பு பைப் லைன் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பைப்லைன் உடைப்பை சீரமைக்கும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் நேற்றும், இன்றும் வினியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தி தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பைப்லைனில் விரிசல் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து, நாளைக்குள் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Madanur , 2-day shutdown of Cauvery combined drinking water supply at Vellore, Ranipettai: Pipeline repair at Madanur
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு