×
Saravana Stores

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விதவிதமான கெட்அப்பில் வந்து 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல்


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று 5 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10ம்தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று காலை தொடங்கியது. இதற்காக விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் நாளான நேற்று முக்கிய அரசியல் கட்சிகள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் டெபாசிட் பணம் பத்தாயிரத்தை சில்லரை நாணயங்களாக செலுத்தி சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை மாவட்டம் சுந்தராபுரம் தாலுகாவைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் நேற்று சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் 44வது முறையாக வேட்புமனுதாக்கல் செய்கிறார். இவர் ஏற்கனவே கோவையில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சவப்பெட்டியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனும் நேற்று மனு தாக்கல் ெசய்தார். இவர் 242வது முறையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இதேபோல், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் நேற்று சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை வலியுறுத்தி டெபிட் கார்டுகளை மாலையாக அணிவித்து வித்தியாசமாக வேட்புமனுதாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனர் காந்தியவாதி ரமேஷ் என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல் நாளில் 5 சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விதவிதமான கெட்அப்பில் வந்து 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Villupuram District ,Vikravandi Constituency ,
× RELATED கர்ப்பிணிகள், முதியோர்கள்...