×

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும். அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் முன்னோட்டமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக, ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து திருஉத்தரகோசமங்கை வழியாக சாயல்குடிக்கு இயக்கப்படும் ஒரு பஸ்சில் முழுக்க, முழுக்க சிஎன்ஜியில் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்த டீசல் டேங்க் அகற்றப்பட்டு 7 கிலோ எடையளவு எரிவாயு நிரப்பக்கூடிய வகையிலான 7 சிலிண்டர்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tamil Nadu ,Ramanathapuram New Bus Station ,Transport Department ,Tamil Nadu State Transport Corporation Kumbakonam ,Bharat Petroleum Corporation Ltd ,
× RELATED ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு