×

கருணை அடிப்படையில் வேலைபெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில், தனக்கு பணி வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.  ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விண்ணப்பித்துள்ளதாக கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சரஸ்வதி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர், சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடகா அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



Tags : Married daughters also entitled to employment on compassionate grounds: ECtHR verdict
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...