இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணைஜனாதிபதி ஊழியர்கள்: மரபு மீறல் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் அலுவலக ஊழியர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மரபு மீறல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மக்களவை, மாநிலங்களவையில் உள்ள பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களாக எம்பிக்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பை அந்தந்த அவையின் செயலாளர்கள் அவைத் தலைவர்களின் ஒப்புதலுடன் வெளியிடுவார்கள். தற்போது மாநிலங்களவையின் தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளார்.

சமீபத்தில் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை குழுக்களில் இதுவரை உள்ள மரபை மாற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் அலுவலக ஊழியர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மாநிலங்களவையின் கீழ் வரும் 20 நிலைக்குழுக்களில் இந்த 8  அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது வினோதமான நடவடிக்கை. இதுபோல் எந்த முன்னுதாரணமும் இல்லை. மாநிலங்களவை குழுக்களில் தனது ஊழியர்களை நியமிப்பதன் மூலம் குழு நடவடிக்கைகளை கண்காணிக்க துணை ஜனாதிபதி முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

Related Stories: