சின்னம், பண பலம் இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியவில்லை: டிடிவி, தினகரன் விமர்சனம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட, மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் டிடிவி.தினகரன் கூறியதாவது: ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரம் போனால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும். துரோகத்தால் அதிமுகவை தன் கைப்பிடியில் வைத்திருக்கிறார் பழனிசாமி. இதற்கு பாஜ உதவும்போதே தன் தவறை உணரும் என தெரிவித்தேன். தற்போது அதற்கான பலனை பாஜ அனுபவிக்கிறது. துரோகம் என்ற கத்தி எடுத்த பழனிசாமி துரோகத்தால் வீழ்த்தப்படுவார்.

இரட்டை இலை சின்னம், பண பலம் இருந்தும், அவர்களின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியவில்லை. இரட்டை இலை இல்லாமல் போயிருந்தால் பழனிசாமியின் நிலைமை என்ன ஆகியிருக்கும். அவர்களிடம் இரட்டை இலை இருந்தாலும் பலவினப்படும், அதற்கு செல்வாக்கு இல்லாமல் போகும். ஜெயலலிதாவின் உன்மை தொண்டர்கள், ஓரணியில் இணைந்து இரட்டை இலையை மீட்போம். அதற்கான காட்சிகள் கடந்த வாரங்களில் தெரிந்து இருக்கிறது.

ஜெயலலிதாவை போல தானும் ஒரு தலைவர் எனக்கூறும் பழனிசாமி, தனியாக கட்சி ஆரம்பித்து புதிய சின்னத்தில் வெற்றி பெற்றால் அவர் சொல்லலாம். ஜெயலலிதாவிடம் யாரை ஒப்பிட்டாலும் அது இழிவு. திமுகவுக்கு எதிராக உள்ள இயக்கங்களுடன் கூட்டணி சேர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். அப்போது அதிமுக தலைமையில் உள்ள துரோகம் காலத்தால் வீழ்த்தப்படும். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள்ளாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பணியை வேகப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: