சென்னை: சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டல கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, வழ.முகமது உசேன், சீனி முகமது, செய்யது அஹமது, சலீம், மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.வி.ராஜா, சலீம் ஜாபர், காஜா முகைதீன், கராத்தே யூசுப், சாதிக், மஸ்தான் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்களின் விவசாயத்தை அழித்து, வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, தாம்பரத்தில் மார்ச் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சென்னை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தொகுதி வாரியாக மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை நடத்துவது, துண்டுபிரசுரம், மனித சங்கிலி விழிப்புணர்வு, வீதி நாடகம், தெருமுனை கூட்டம் ஆகியவற்றின் வாயிலாக பிரசாரத்தை முன்னெடுப்பது, சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மோசமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகர சாலைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் சீரமைக்க வேண்டும், கோடைகாலம் துவங்க உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
