பெரியகுளம்-அடுக்கம் மலைச்சாலையில் மண்சரிவு: வாகனப் போக்குவரத்திற்கு தடை

பெரியகுளம்: பெரியகுளத்திலிருந்து அடுக்கம் செல்லும் மலைச்சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. கடந்த வடகிழக்கு பருவமழையின்போது, பெய்த கனமழையால், அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்திற்காக மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிக பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதனைத்தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தர பணிகளை மேற்கொள்வதற்காக சரிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது சாலையில் மீண்டும் பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு விழுந்தன.

இதனால், இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்துள்ளோம். இந்த பணிகள் முடிவடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்’’ என்றனர்.

Related Stories: