×

திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தொடங்கியது தாகத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீபமலை மற்றும் கவுத்தி, வேடியப்பன்மலை காப்புக்காடு பகுதிகளில், தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.திருவண்ணாமலையில், கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயில் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. அதிகாலையில் பனியும், குளிரும் குறையாத நிலையில், பகலில் அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் கோடை வெயில் பாதிப்பு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் வாரத்திலேயே கோடை வெயில் தொடங்கியிருக்கிறது.

எனவே, திருவண்ணாமலை தீபமலை, கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளில் உள்ள மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்றவை தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளையும், வயல்வெளிகளையும் நோக்கி வருவது அதிகரித்துள்ளது.மேலும், தீபமலைமீது அமைந்துள்ள அல்லி குகை, விருபாட்சி குகை, முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாதத்தீர்த்தம் போன்றவற்றில் தண்ணீர் வற்றியுள்ளன.

அதேபோல், கிரிவலப்பாதைக்கு அருகே அமைந்துள்ள வேடியப்பன் மலை, கவுத்திமலைகளிலும் அமைந்துள்ள நீர் சுனைகள் வற்றிவிட்டன. அங்கு, அடிக்கடி நடக்கும் தீ விபத்துகளும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.எனவே, இனி வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தண்ணீருக்காக விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் நோக்கி வன விலங்குகள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதையொட்டி, தீபமலை அடிவாரத்தில் அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் சிறிய தண்ணரீ் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டுசென்று நிரப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. வனத்துறைக்கு உதவியாக தன்னார்வ அமைப்புகளும் இப்பணியில் ஈடுபட முன்வந்துள்ளன.

மேலும், கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என வனச்சரகர் சீனுவாசன் தெரிவித்தார். அதற்கான பணியில், சுழற்சி முறையில் வன ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags : Tiruvannamalai , Tiruvannamalai: Thiruvannamalai Deepamalai and Gauthi, Vediyapanmalai reserve forest areas are suffering from water scarcity.
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...