டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தெலங்கானா தொழிலதிபர் நேற்றிரவு அதிரடி கைது: மாஜி துணை முதல்வரிடம் சிறையில் விசாரணை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய தெலங்கானா தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி  முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. சிபிஐ கஸ்டடி  விசாரணை முடிவுற்ற நிலையில் அவர் டெல்லி சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.  இன்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இதற்கிடையே இதே வழக்கில் தொடர்புடைய தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை என்பவரை நேற்றிரவு 11 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ராபின் டிஸ்டில்லரீஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வரும் அருண் ராமச்சந்திர பிள்ளையை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றவாளியாக சிபிஐ சேர்த்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும், அருண் ராமச்சந்திர பிள்ளைக்கும் சில தொடர்புகள் இருப்பதால் ஏற்கனவே சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது ராமச்சந்திர பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தன.

Related Stories: