திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி : தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கான ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை வலுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் அல்லது ஒரு 10 ரூபாய் நாணயத்தை இயந்திரத்திற்குள் செலுத்தினால் தானியங்கி மூலம் மஞ்சப்பை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 முதன்முதலாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை நேற்று கலெக்டர் பிரதீப் குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் மலையாண்டி கூறுகையில், முதல்கட்டமாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த இயந்திரம் மணப்பாறை டிஎன்பில் நிறுவனம் சார்பில் 1.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 200 மஞ்சப்பைகள் இருப்பு வைக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மஞ்சப்பை இயந்திரத்திற்குள் இல்லாதபோது அவற்றை மீண்டும் நிரப்பிட மகளிர் திட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் நோக்கமே பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது தான்.

இரண்டாம் கட்டமாக காந்தி மார்க்கெட் பகுதியில் இந்த இயந்திரம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 500 பைகள் இருப்பு வைக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த இயந்திரங்களை பொருத்தி அவற்றை ஒரு நிறுவனத்தின் பராமரிப்பில் விடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரத்தின் பயன்பாட்டை அதிகரித்து மஞ்சப்பையை பயன்படுத்த முன் வரவேண்டும் என்பதற்கான ஒரு விழிப்புணர்வு இந்த இயந்திரம் மூலம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Related Stories: