×

அண்ணா மேம்பாலம் அருகே ரூ.1000 கோடி மதிப்பு 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்த தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989ம் ஆண்டே அரசு நடவடிக்கை எடுத்தது.  

இந்த நடவடிக்கைக்கு  எதிராக புவனேஷ்குமார் என்பவர் தாக்கல்  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று  உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு  உத்தரவிட்டது.

விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானதுஎன   உத்தரவிட்டிருந்தார். ஆனால், நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் தானாக முன்வந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று தோட்டக்கலை சங்கத்திற்கு  நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. புவனேஷ்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் கூடுதல் அட்கேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரனும் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆய்வு செய்த பிறகே தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது. எனவே, இந்த மேல்முறையீடு வழக்கு  தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : Krishnamurthi ,Anna Madhavam ,Chennai , Anna Membalam, Horticulture Krishnamurthy, Case Dismissed, Court Order
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்