×

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளரிடம் அத்துமீறிய வார்டுபாய்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியுடன் வந்த உதவியாளரிடம், வார்டு பாய் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர், போதை பழக்கத்திற்கு அடிமையானதால், அதிலிருந்து மீள்வதற்காக அரசு மருத்துவமனையில் உள்ள போதை தடுப்பு மறுவாழ்வு பிரிவில் கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, துணையாக அவரின் 28 வயதுள்ள மனைவி உடனிருந்தார்.

இந்நிலையில், அந்த வார்டில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்த தற்காலிக பணியாளர் ஏழுமலை (30). இவர் அன்று இரவு உதவிக்கு வந்த நோயாளியின் மனைவியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதேபோன்று, மறுநாள் இரவும் நோயாளிகள் அனைவரும் தூங்கிய நேரத்தில், ஏழுமலை அங்கு சென்று அந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அன்று இரவு பணியில் இருந்த செவிலியரிடம் கூறியிருக்கிறார்.  இதனைத்தொடர்ந்து, மறுநாள் மருத்துவமனை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

அத்துமீறி நடந்து கொண்ட வார்டுபாய் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், அவர் கணவரை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதுநாள் வரை சம்மந்தப்பட்ட வார்டுபாய் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது, ஏழை, எளிய மக்கள் நம்பி வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kanchipuram Govt Hospital , Kanchipuram Govt Hospital Wardboy Violates Patient Attendant: Social Activists Demand Action
× RELATED காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்...