×

வன்னிப்பாக்கம் ஊராட்சியில் இறால், மீன் பண்ணை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சியில் வன்னிப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி கொசஸ்தலை ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளதால், இந்த ஆற்றங்கரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், கொண்டக்கரை, மீஞ்சூர், தேவதானம், அனுப்பம்பட்டு, கல்பாக்கம், காணியம்பாக்கம், சிறுவாக்கம், நெய்தவாயல், வாயலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.

இந்த நிலையில் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இறால் பண்ணை, மீன் பண்ணைகள் அமைத்துள்ளனர். இந்த இறால்பண்ணை, மீன் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிலும், வன்னிப்பாக்கம் ஏரியிலும் கலக்கிறது. இதனால் வன்னிப்பாக்கம் ஏரியில் மீன்கள் செத்துமடிகிறது. மேலும் அந்த கழிவுநீர் மாசடைந்து, அதிலிருந்து ஊராட்சி மக்களுக்கு தண்ணீர் குழாய் மூலம் எடுத்துச் செலுத்தப்படுகிறது. சுகாதாரமற்ற அந்த குடிநீரை பருகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் பலர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். கோரிக்கை மனு கொடுத்த பிறகு அதிகாரிகள் சிலர் வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். ஆனால் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற திங்கட்கிழமை ஊராட்சி நிர்வாகம் மூலம் கிராமமக்களை திரட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சுளா பஞ்சாச்சாரம் (திமுக) கூறும்போது, எங்கள் ஊராட்சியில் இருந்துதான் 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் இறால் மற்றும் மீன் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து எடுத்துச் செல்லப்படும் குடிநீர் சுகாதாரமற்ற குடிநீராக மாறி, அதை குடிக்கும் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலைமை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி சண்முகம் கூறும்போது, எங்கள் ஊராட்சி மற்றும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொசஸ்தலை ஆறு, ஆழ்துளை கிணறு மூலம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இறால் பண்ணை மற்றும் மீன் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் செய்ய முடியவில்லை. பெரிதும் பாதிக்கப்படுகிறோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் இறால் மற்றும் மீன் பண்ணைகளுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Vannipakkam Panchayat , Risk of disease spread due to sewage from shrimp and fish farms in Vannipakkam Panchayat: Request to take action
× RELATED வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய...